ஆளுமை:அசோகாம்பிகை, யோகராஜா

From நூலகம்
Name அசோகாம்பிகை, யோகராஜா
Pages இளையதம்பி
Pages கனகம்மா
Birth 1949.03.02
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அசோகாம்பிகை, யோகராஜா (1949.03.02 - ) மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் கனகம்மா. தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1977இல் ஆசிரியர் சேவையில் இணைந்து மண்டூர் மகா வித்தியாலயத்தில் பணி தொடங்கினார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர், மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டக்களப்புச் சிவானந்தா வித்தியாலயத்தில் பணியாற்றி 2009இல் ஓய்வு பெற்றார்.

1970களில் எழுதத் தொடங்கிய இவர் மண்டூர் அசோகா என்ற புனைபெயரால் நன்கறியப்படுகிறார். ரேவதி, செந்தில் பிரியா ஆகிய புனைபெயர்களிலும் எழுதி வந்துள்ளார். வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஜோதி, தென்றல், தாய்நாடு, சுடர், தினக்குரல், ஞானம், இருக்கிறம் போன்ற பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதியுள்ள இவர் வானொலி மெல்லிசை நிகழ்ச்சிகளுக்குப் பல பாடல்களை எழுதியுள்ளார்.

கொன்றைப்பூக்கள் (சிறுகதைகள், 1976), சிறகொடிந்த பறவைகள் (சிறுகதைகள், 1993), உறவைத்தேடி (சிறுகதைகள், 2002), பாதை மாறிய பயணங்கள் (நாவல், 1992) போன்றவை இவரது நூல்கள். 1995 இல் நடைபெற்ற மண்முனை வடக்குக் கலாச்சாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும் 1997 இல் மண்டூர் கலை இலக்கிய அவையினரது பாராட்டு விழாவில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதுடன் 2001 இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் 'தமிழருவி' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 106-110
  • நூலக எண்: 3407 பக்கங்கள் 03-04