நிறுவனம்:கிளி/ முருகானந்தா கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ முருகானந்தா கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர்
முகவரி முரசுமோடை, பரந்தன், கிளிநொச்சி
தொலைபேசி 94776171397
மின்னஞ்சல் tvarathan2012@gmail.com
வலைத்தளம் www.murugananthamv.sch.lk

வளம் கொழிக்கும் வன்னி நிலப்பரப்பில் கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவிலே மூவரசர் ஆண்ட பெருமை உடையதாக கூறப்படுவது முரசு மோட்டை எனும் அழகிய கிராமமாகும். இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான இடங்களில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஆங்காங்கே பல கல்லூரிகள் அமைக்கப்பட்டன. கிராமப்புறங்களில் இத்தகைய பாடசாலைகள் அமைந்தவை மிக மிக சொற்பமே. இக்குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக இந்து போட் என்னும் இந்து அமைப்பு பாடசாலைகளை நிறுவி சகல மாணவர்களும் கல்வி கற்க வாய்ப்பளித்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முரசு மோட்டையில் அக்காலத்தில் வாழ்ந்த அமரர் கணபதிப்பிள்ளை பொன்னையா என்பவர் தனது கிராமத்திலும் இவ்வாறான பாடசாலை ஒன்று வேண்டும் என எண்ணித் தனது காணியில் முருகானந்தா பாடசாலையை அமைக்க உதவினார். இதன் காரணமாகவே 1939 ஆம் ஆண்டு தைத்திங்கள் 16ஆம் நாளிலே இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது முதலில் ஒரு கொட்டகை மாத்திரமே அமைக்கப்பட்டது. இதற்கு அமரர் மயில்வாகனம் முருகேசன் என்பவரே தலைமை ஆசிரியராக இருந்தார். ஆரம்பகால ஆசிரியரான இவரது பெயரையும் ஆனந்தமாக உறைகின்ற முருகப்பெருமானது பெயரையும் கொண்டு இது முருகானந்தா வித்தியாசாலை என அழைக்கப்பட்டது. இதன் பின்னர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவ வித்யா விருத்தி சங்கம் இப்பாடசாலையை பொறுப்பு எடுத்துக் கொண்டது அப்போதும் அமரர் மயில்வானம் முருகேசன் அவர்களே தலைமை ஆசிரியராக இருந்து ஏழு பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து கொண்டிருந்தார்.

பின்னர் 1950 ஆம் ஆண்டு 65 பிள்ளைகளைக் கொண்டு இயங்கிய இப்பாடசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக இன்னும் ஒரு கொட்டகை அமைக்கப்பட்டது. அப்போது இரண்டு ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர் மாணவர்கள் தொகை படிப்படியாக அதிகரித்தது. 1955 ஆம் ஆண்டு இம்மாணவர்களது இடப்பற்றாக் குறையை நீக்குவதற்காக முரசு மோட்டை பழைய கமத்தைச் சேர்ந்த திரு. சி. கு.இராசையா அவர்களால் இன்னும் ஒரு கொட்டகை அமைக்கப்பட்டது. இவ்வாறு வளர்ச்சியடைந்த பாடசாலையில் 1960 ஆம் ஆண்டு ஆண்டில் க.பொ.த சாதாரண தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. சாதாரண தரத்தில் மாணவர்கள் அதிகமானோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமையால் உயர்தர வகுப்பை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1963 ஆம் ஆண்டில் இப்பாடசாலை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது 1965 ஆம் ஆண்டில் குறித்த கட்டடங்கள் கற்களினால் கட்டப்பட்டு ஓடு போடப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் வித்தியாசாலை முருகானந்த மகா வித்தியாலயம் எனத் தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்தும் பாடசாலையின் குடிநீர் பற்றாக்குறையை நீக்குவதற்காக இரண்டு கிணறுகள் வெட்டப்பட்டன. பாடசாலைத் தோட்டம் நெற்செய்கை என்பவற்றை மேற்கொள்ள தேவையான வசதிகள் செய்யப்பட்டது. பாடசாலையின் தோட்டம் நெற்செய்கை என்பவற்றின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த விவசாய பாட ஆசிரியை திருமதி. தவமணி சிவபாலச்சந்திரன் அவர்களது சேவை அளப்பரியது. பாடசாலையின் வருமானத்தின் பெரும்பங்கினை நெற்செய்கையால் பெற்றுக் கொடுத்த பெருமை இவருக்கே உரியது. விவசாயத்தேவைக்கு வழங்கப்பட்ட ஐந்து ஏக்கர் காணியில் மூன்று ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்தி இரண்டு ஏக்கர் விளையாட்டு மைதானமாக பாவிக்கப்பட்டது. பாடசாலை வளர்ச்சியிலே அதிக அக்கறை கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்த விஞ்ஞான பாட ஆசிரியர் அமரர் கந்தசாமி மகேந்திரன் அவர்களையும் இப்பாடசாலை நினைவில் கொள்கிறது. இவ்வாறு பல துறைகளிலும் பலவாறு முன்னேற்றம் கண்டு வரும் இப் பாடசாலையின் க.பொ.த.சாதாரண தரப்பெறுபேறுகள் அதிகரித்து வந்தமையின் காரணத்தால் 1980 ஆம் ஆண்டில் அதிபராக கடமை ஆற்றிய திரு ஏ.சோமலிங்கம் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கொண்ட விடாமுயற்சியால் க. பொ.த உயர்தர கலைப் பிரிவு இதே ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் எனக் கருதிய அதிபர் திரு க. ம. பத்மநாதன் அவர்கள் கொண்ட விடாமுயற்சியால் பாடசாலைக்கு முன்புறமாக உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தெருக்கள் திணைக்களத்தின் காணியை மைதானம் ஆக்குவதற்கு அப்போதைய அரசாங்க அதிபர் திரு.க .பொன்னம்பலம் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டது. இவரது காலப்பகுதியில் இப் பாடசாலையின் க.பொ.த. உயர்தர கணித விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

இப் பாடசாலை வளர்ச்சியின் வரலாற்றிலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒருவர் அமரர் சேமன் செல்லையா அவர்கள் ஒரு நாடு முன்னேற வேண்டுமாயின் அந்நாட்டின் கல்வி முன்னேற வேண்டும் என்ற கருத்தை தனது மனதில் பதித்த பெரியார். இவர் முரசு மோட்டை கிராமத்தின் கல்வி வளர்ச்சியிலே எடுத்த முயற்சிகள் அளவற்றவை தனது சொந்த பணத்தினை செலவழித்தது மட்டுமில்லாமல் தனது பொன்னான நேரத்தையும் செலவழித்து பாடசாலைக்காக வழக்காடி பாடசாலைக்கு காணியைப் பெற்றுக் கொடுத்த பெருமை இவரையே சாரும். பாடசாலைக்குரிய கட்டடங்களை புனரமைப்புச் செய்த போதும் அதற்கு தேவையான சீமெந்தை தனது சொந்த வாகனத்தில் ஏற்றித் தந்ததோடு வித்யாலய வளவைச் செப்பனிடும்போதும் மதில் கட்டும் போதும் நிதி உதவி வாகன உதவி போன்ற உதவிகள் புரிந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த பெருமைக்குரியவராக இவர் விளங்கியமை குறிப்பிட வேண்டியது ஆகும்.

இவ்வாறு பல்வேறு வகையிலும் தனது வளர்ச்சியில் மேன்மை கொண்டு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த பாடசாலை ஆனது நாட்டு சூழ்நிலை காரணமாக 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி முரசுமோட்டையில் இருந்து இடம் பெயர்ந்து தருமபுரம் மகா வித்தியாலயத்துடன் இணைந்து மாமர நிழலிலும் பரிலூக்கா ஆலய முன்றலிலும் இயங்கிக் கொண்டு இருந்தது அப்போதைய அரச அதிபர் திரு. வீ. ராஜகுலசிங்கம் அவர்கள் மாணவர்களின் இடர்களை நீக்க வேண்டும் எனக் கருதி கிளி/ தருமபுரம் இல .1 அ. த. க. பாடசாலை வளவில் ஒரு பகுதியில் இப்பாடசாலையும் இயங்க அப் பாடசாலை அதிபர் திருமதி வேல் முருகு அவர்களிடம் அனுமதி பெற்று செயல்படுத்தினார். இவ்வாறு பல இடப்பெயர்வுகள், துன்பங்கள், வேதனைகள் என்பவற்றை சந்தித்த வேளையிலும் கூட 15.01. 1999 ஆம் ஆண்டு தனது 60ஆவது அகவையினைப் பூர்த்தி செய்து வைர விழாவை கொண்டாடி மலரொன்றையும் வெளியிட்டது.

இக்கல்லூரி வளர்ச்சியின் படிக்கற்களாக 1980 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்கப்பட்டமையும் ,1982 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு ஆரம்பிக்கப்பட்டமையும், 1992 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்தமையும், 1995ஆம் ஆண்டு கணித விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவை ஆகும். கல்வி விளையாட்டு இணைபாட விதான செயற்பாடுகள் போன்ற பல்வேறு நிலைகளிலும் வெற்றி கண்டு வளர்ச்சி நிலை அடைந்துள்ள இப்பாடசாலை ஆனது 2002 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவிலே மூன்று மாணவர்கள் 3 ஏ பெறுபேற்றைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் மூன்று நிலைகளையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளமை பாடசாலையின் வரலாற்றுப் பெருமையையும் புடம் போட்டுக் காட்டுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் வெற்றியைக் கண்டு களித்துக் கொண்டிருக்கும் வேளையிலே 2008-2009 ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்வினால் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து தாங்கொணாத் துயரங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள் அனைவரும் சிதறுண்டு இடம்பெயர இப்ப பாடசாலையும் இடம் பெயர்ந்து பின்னர் வவுனியா கல்வியியற் கல்லூரியில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டது. பின்னர் மீள்குடியேற்றம் இடம்பெற்றபோது 22.04.2010 ஆம் ஆண்டில் மீண்டும் தனது சொந்த இடத்திலே கால் பதித்தது. இதே நாளிலேயே அதிபர் தில்லைய ம்பலம் வரதன் அவர்கள் இருபதாவது அதிபராக இப்பாடசாலையை பொறுப்பெடுத்துக் கொண்டார். அக்காலத்திலே 40 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் மாத்திரமே பாடசாலையில் இணைந்து கொண்டனர். ஆரம்பப் பாடசாலையின் கட்டடத்தில் தரம் 1-13 வரையான வகுப்புகளில் குறைந்த அளவிலான மாணவர்கள் கல்வி பயின்றனர். மீள ஆரம்பித்தபோது இப்பாடசாலையின் கட்டடங்கள் இடிந்த நிலையில் அயலில் விட்டுச் சென்ற தளபாடங்களைத் திரட்டியே வகுப்புகள் நடைபெற்றன. இப்பிரதேசத்தை சேர்ந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலம் விரும்பிகள் ஆகியோரின் உதவியுடன் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெரிய அளவிலான சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம் இடைநிலை பாடசாலை வளாகத்தில் செயற்பாடுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்தது.

இக்காலப் பகுதியில் பாடசாலைக்கான ஒழுக்கக் கோவை ஒன்று தயாரிக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கதாகும். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்டத்தினுடைய கல்விப் பணிப்பாளராகக் கடமை ஆற்றிய உயர்திரு. தம்பி ராசா குருகுலராசா அவர்களின் கோரிக்கையால் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இப்பாடசாலைக்கு வருகை தந்து “இசுறு“ திட்டத்தின் கீழ் உள்வாங்கியமை இப்படசாலை வளர்ச்சியின் அடுத்த கட்டம் எனலாம். இதனைத் தொடர்ந்து ஆயிரம் இடைநிலை பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் முதற்படியாக ஆரம்ப பிரிவும் ,இடைநிலைப் பிரிவும் பிரிக்கப்பட்டு தனித்தனியாக 01.01.2011 ஆம் ஆண்டில் இயங்க ஆரம்பித்தது. இத்திட்டத்தின் கீழ் இக் கல்லூரிக்கு மூன்று மாடி கட்டிடம் மகிந்தோதய ஆய்வுக்கூடம் என்பன கிடைக்கப்பெற்றன. “கொய்கா" திட்டத்தின் கீழ் கண்டாவளைக் கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கான விடுதிகள் இக்காணியில் அமைக்கப்பட்டுப் பூர்த்தியாகப்பட்டுள்ளன. பாடசாலை வளர்ச்சியில் 2013 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்கதாகும். இக்காலத்திலேயே பாடசாலையில் முன்னர் இருந்து ஓட்டு மண்டபம் ஒன்று மாற்றப்பட்டு 90 அடி நீளமான பவள விழா ஞாபகார்த்த மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது. பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்குரிய காணியை பாடசாலைக்கு உரிய காணியாக மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கு உதவிய அப்போதைய கண்டாவயைப் பிரதேச செயலர் திரு. எஸ். சத்தியசீலன் அவர்களுக்கும், தற்போதைய பிரதேச செயலர்.T.முகுந்தன் அவர்களுக்கும் கரைச்சி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர் திரு. எஸ். சுதர்சன் அவர்களுக்கும் இந்த பாடசாலை நன்றி கூறிக் கொள்கிறது. பவள விழா காணும் ஆண்டில் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் மகிந்தோதயா ஆய்வுக்கூடம் வானளாவ உயர்ந்து நிற்கும் மூன்று மாடிக் கட்டடம் என்பன கல்லூரி தாயின் அழகினை மென்மேலும் மெருகூட்டி நிற்கின்றன.

இக்கல்லூரியின் இருபதாவது அதிபராக தடம் பதித்து திறமையாக நிர்வாகித்து வரும் அதிபர் திரு. தில்லையம்பலம் வரதன் அவர்களது காலம் கல்லூரி வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு பொற்காலம் என்றே கூற முடியும். இவ்வாறு புதுப்பொலிவுடன் புத்துயிர் பெற்று விளங்கும் கிளி/ முருகானந்தா கல்லூரி ஆனது முரசுமோட்டைக் கிராமத்தின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஆன படிக்கற்களாக அமைகின்றது இத்தகைய கல்லூரி 17.01.2014 ஆம் ஆண்டில் தனது 75 ஆவது அகவையில் கால் பதித்துள்ளது.