ஆளுமை:சண்முகதாஸ், அருணாசலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகதாஸ்
தந்தை அருணாசலம்
தாய் முத்தம்மாள்
பிறப்பு 1940.02.01
ஊர் திருகோணமலை
வகை பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகதாஸ், அருணாசலம் (1910.02.01 - ) திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், திருநெல்வேலியை வாழ்விடமாகவும் கோண்டாவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்த்துறைப் பேராசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை அருணாசலம்; தாய் முத்தம்மாள். இவர் இளமைக் கல்வியைத் திருகோணமலை பிரான்சிஸ் சேவியர் பள்ளியிலும் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் பயின்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிச் சிறப்புப் பட்டம் பெற்றதோடு ஐக்கிய இராச்சியத்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மொழியியற் துறையில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றார்.

பேராதனை, யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக, பேராசிரியராக, முதுநிலைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதியாக, உயர் பட்ட ஆய்வு பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றியுள்ளார். நைஜீரியா இபாடன் பல்கலைக்கழகம், ஜப்பான் கச்சுயின் பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம் ஆகிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் முதல் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டவர். யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் முதல் இயக்குனராகவும் சைவ வித்தியாவிருத்திச் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை நிபுணத்துவ ஆலோசகராகப் பணியாற்றியவர்.

எழுத்துலகில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள், இலங்கைப் பேராசிரியர்களின் தமிழ்ப்பணி, தமிழின் பா வடிவங்கள், மொழியும் பிற துறைகளும், ஆக்க இலக்கியமும் அறிவியலும், துணைவேந்தர் வித்தியானந்தன், கிறிஸ்தவத் தமிழ் இலக்கிய வளர்ச்சி முதலான நூல்களை ஆக்கியுள்ளார்.

இவர் 1963 இல் ஆறுமுகநாவலர் விருது, 1987 இல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்ற நூலுக்காகச் சபாரத்தினம் நினைவுப்பரிசு, யுனெஸ்கோ விருது, இலங்கை அரசின் சாகித்ய ரத்னா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 68
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 86-89
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 13-14