ஆளுமை:ஆனந்தராணி, பாலேந்திரா

From நூலகம்
Name ஆனந்தராணி, பாலேந்திரா
Birth
Place வல்வெட்டித்துறை
Category கலைஞர்

ஆனந்தராணி, பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவர் தனது ஆறு வயதிலிருந்து கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தன் சகோதரிகளிடம் நடனம் கற்றார்.

1973 இல் கொழும்பு நவரங்க கலாமண்டபத்தில் தனது சகோதரியுடன் இணைந்து நடன அரங்கேற்றம் செய்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் 8 ஆம் ஆண்டு படிக்கும் போது பாடசாலை நிதிக்காக மேடையேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் நந்தனாரின் மனைவியாக நடித்தார். தொடர்ந்து மழை, கண்ணாடி வார்ப்புக்கள், மன்னிக்கவும், சம்பந்தம், பாரத தர்மம் போன்ற பல மேடை நாடகங்களிலும் வானொலி நாடகங்களிலும் நடித்தார். "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1974 இல் இலங்கை வானொலியில் இணைந்த இவர், கதம்பம், உரைச்சித்திரங்கள் போன்ற பலவற்றில் பங்கு கொண்டார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

இவர் 1975 இல் கட்டுப்பெத்தை தமிழ்ச்சங்கம் மேடையேற்றிய 'பிச்சை வேண்டாம்' நாடகத்தின் மூலம் நவீன நாடகத் துறைக்குள் காலடி பதித்தார். 1978 இல் யாழ் நாடக அரங்கம் கல்லூரிப் பட்டறையில் இணைந்தார். சில காலம் யாழ்ப்பாணக் கல்லூரியில் நடன ஆசிரயராகவும் பணியாற்றினார். இவர் இலண்டனில் ஒலிபரப்பாகிய ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலியான சன்றைஸ் வானொலியில் 13 வருடங்கள் செய்திவாசிப்பாளராக இருந்தார். 300 இற்கும் மேற்பட்ட நாடக மேடையேற்றங்களையும் 200 இற்கும் மேற்பட்ட அரங்கேற்ற மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்தளித்துள்ளார்.

இவரது கலைச் சேவைக்காக ஈழவர் திரைக்கலை மன்றத்தினரால் 'கலாவிநோதர்' என்ற பட்டமும் சிவயோகம் அறக்கட்டளையின் 'கலையரசி' பட்டமும் பிரென்ற் தமிழ்ச் சங்கத்தின் விருதும் தமிழினியின் 2004 இற்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 295