ஆளுமை:அப்துல் ஹமீத், ஹசன்

From நூலகம்
Name அப்துல் ஹமீத்
Pages ஹசன்
Pages ஹாசியா உம்மா
Birth 1949
Place தெமட்டக்கொடை
Category கலைஞர்

அப்துல் ஹமீத், ஹசன் (1949 - ) கொழும்பு, தெமட்டக்கொடையைச் சேர்ந்த அறிவிப்பாளர், வானொலி, மேடை நாடக, திரைப்பட நடிகர். இவரது தந்தை ஹசன்; தாய் ஹாசியா உம்மா. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராகப் பணியாற்றிய இவர், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இந்தியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பங்குபற்றியுள்ளார்.

இவர் ஈழத்து மெல்லிசையை இலங்கை வானொலிக்குள் முக்கியமான நிகழ்ச்சியாகக் கொண்டு வந்து, இந்நிகழ்ச்சியில் இறைதாளன் என்னும் புனைபெயரில் பாடல்கள் எழுதியுள்ளார். இவரது கவிதைப் புனைவிற்கு இசை மழையில் நனைந்திடும்... என்ற பாடல் எடுத்துக்காட்டாகும். பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் பிதாமகனான இவர், சிங்கப்பூர் வானொலியின் இருபந்தைந்தாவது வெள்ளிவிழா நிகழ்ச்சியைச் சுமார் 11 மணி நேரம் தொகுத்தளித்தார்.

சில்லையூர் செல்வராசனின் றோமியோ ஜூலியற் கவிதை நாடகம், எஸ். ராம்தாசின் கோமாளிகள் கும்மாளம், கவிஞர் அம்பியின் யாழ்பாடி (இந்த நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பவள விழாவின்போது இறுவட்டாக வெளியிடப்பட்டது), ஒரு வீடு கோவிலாகின்றது, தென்னிந்திய கலைஞர்களும் பங்குபற்றிய எம். அஷ்ரப்கானின் அனிச்ச மலர்கள், சக்கரங்கள், கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள் ஆகிய வானொலி நாடகங்களை இவர் இயக்கியுள்ளார். இலங்கையில் தயாரான கோமாளிகள் திரைப்படத்தில் நடித்த இவர் தென்னிந்திய சினிமாவில் தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் முதலான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இலங்கையிலும் இந்தியாவிலும் பல மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 147-149